Panchangam Information

ஒவ்வொரு மனுவந்தரத்தின் முடிவிலும் ஒரு கிருதயுகம் பிரளயகால மாகும். 14 மனுவந்தரங்களும் அவற்றின் பிரளயகாலங்களும் கொண்டது ஒரு கற்பம். ஒவ்வொரு கற்பத்தின் தொடக்கத்திலும் ஒரு கிருதயுககாலம் பிரளயகாலமாம். இப்படியாக ஒரு கற்பத்தில் லோககாலம் 994 சதுர்யுகமும் பிரளயகாலம் 6 சதுர்யுகமுமாக 1000 சதுர்யுகமுண்டு. இக்கால முடிவிலே பூமி அழியும். இது பிரமாவுக்கு ஒரு பகல். இவ்விதமாகப் பிரமாவுக்கு 100 வயசுண்டு. இப்பொழுதிருக்கும் பிரமாவுக்கு 50 வயசாகி முதற் பரார்த்தம் கழிந்து இரண்டாவது பரார்த்தத்தில் முதலாவது கற்பம் நடக்கிறது. இந்தச் சுவெதவராஹ கற்பத்தில் ஆதியில் ஒரு பிரளயமும் அதன் பின் 6 மனுவந்தரங்களும் அவைகளின் பிரளயங்களும் கழிந்தன. ஏழாவதாகிய வைவஸ்வத மனுவந்திரத்தில் 27 சதுர்யுகங்கள் சென்று 28-வது சதுர்யுகத்தில் கிருத திரேத துவாபர யுகங்கள் சென்று விட்டன. இக் கலியுகத்தில் சென்ற சார்வரி வருஷத்துடன் 5122 வருடங்கள் கழிந்தன.

சௌரவருஷமாவது:

சூரியன் மேட ராசியிற் பிரவேசிப்பது முதல் மீன ராசியை விட்டு நீங்கும் வரையும் உள்ள காலப்பகுப்பாகும்.

சாந்திர வருஷமாவது:

ஒரு சௌர வருஷப்பிறப்புக்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வ பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறப்புக்கு முன் அதனை அடுத்து முடியும் அமாவாசை வரையு முள்ள (12 சாந்திர மாசங்களை அடக்கிய காலப்பகுப்பாம். இது அதிகமாசம் வரும்போது 13 சாந்திர மாசங்களை உடையதாகும்.

அயன வருஷமாவது:

சூரியன் மேஷா யனத்திற் பிரவேசிப்பது முதல் மீனாயனத்தில் நீங்கும் வரையுமுள்ள காலப்பகுப்பாகும். இந்த துர்முகி வருஷ மேஷராசியின் ஆரம்பத் துக்கு முன்னே 24 பாகை 08 கலை15 விகலை தூரத்தில் இருக்கின்றது.

சௌரமாதங்களாவன:

மேடம் முதல் மீனமீறாகிய 12 ராசிகளிலும் தனித்தனி முறையே சூரியன் சஞ்சரிக்கின்ற சித்திரை முதற் பங்குனியீறான 12 காலப் பகுப்புகளாம்

சாந்திர மாதங்களாவன:

சைத்திரம் முதற் பாற்குணம் ஈறான 12 காலப் பகுப்புகளாம்.

அரபுத் தேதியாவன:

தமிழ்த் தேதியின் முதனாட் சூரியஸ்தமனம் முதல் அன்று சூரியஸ்தமனம் வரையும் உள்ள காலமாகும்.

இங்கிலிசு தேதியாவது:

தமிழ்த் தேதியின் முதனாளிரவு 12 மணி முதல் அன்றிரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களாகும்.

தமிழ்த் தேதி வாரங்கள்:

அன்று சூரியோதயம் முதல் மறுநாள் சூரியோதயம் வரையுமுள்ள 60 நாழிகையாகும்

திதிகளாவன:

சந்திரன் சூரியனிலிருந்து திதி ஒன்றுக்கு 12 பாகை வீதம் விலகிச் செல்வதினாலேற்படும் பூர்வ பக்க பிரதமை முதல் அபர பக்க அமாவாசை வரையும் உள்ள 30 காலப்பகுப்புகளாம்.

நட்த்திரங்களாவன:

சந்திரன் மேஷராசியின் ஆரம்பத்திலிருந்து நட்த்திரம் ஒன்றுக்கு 13 பாகை 20 கலை வீதம் விலகிச் செல்வதினால் ஏற்படும் அச்சுவினி முதல் ரேவதி வரையும் உள்ள 27 காலப் பகுப்புகளாம்.

யோகங்களாவன:

சூரியன் சந்திரன் ஸ்புடங்களின் கூட்டுத்தொகையை யோகம் ஒன்றுக்கு 13 பாகை 20 கலை வீதம் விஸ்கம்பம் முதல் வைதிருதியீறாகக் கொள்ளும் 27 காலப் பகுப்புகளாம்.

திதி, நட்த்திரயோகங்கள்

முந்திய திதி நட்த்திர யோகங்களுக்குக் குறிக்கப் பட்ட நாழிகை முதல் அவ்வற்றிற்குக் குறிக்கப்பட்ட நாழிகை வரையுமாம்.

கரணங்களாவன:

ஒரு திதிக்கு இரண்டாகப் பூர்வபக்க பிரதமையின் பிற்கூறு தொடங்கி முறையே 8 முறை நிகழும் பவம் முதல் விட்டி வரை 7ம் அபர பக்க சதுர்த்தசியின் பிற்கூறுமுதல் நிகழும் சகுனம் முதல் கிம்துக்கினம் ஈறான நான்கும் ஆகிய 11 காலப் பகுப்புகளாம். இவை பெரும்பாலும் ஒன்றைவிட்டொன்றே குறிக்கப்பட்டிருக்கும். அது முந்திய திதயந்தம் முதல் குறித்த நாழிகை வரையுமாம்.

நட்த்திர தியாச்சியமாவது

நட்த்திர விஷநாழிகையாம். இது குறிக்கப்பட்ட நாழிகைக்கு மேல் 4 நாழிகை வரையுமாம். இது சுப கருமங்களுக்குத் தீது.

உதயாப்பரநாடி விநாடிகளாவன

அவ்வத் தேதிகளில் சூரியன் உதித்த பின் அவ்விராசியில் நின்ற நாடி விநாடிகளாகும்.

உதயலக்கினம் காணும் வகை:

குறித்த தினத்தன்று சூரியன் உதய மணி மினிற் முதல் குறித்த காலம் வரை சென்ற மணி மினிற்றுக்களை மணி ஒன்றுக்கு 2â நாடி வீதமும், மினிற் ஒன்றுக்கு 2â விநாடி வீதமும் பெருக்கி நாடி விநாடிகளாக்க உதயாதி சென்ற நாடிவிநாடிகளாம்.

(1) இவ்வுதயாதிசென்ற நாடிவிநாடிகள் அத்தேதியின் உதயாற்பரத்திலும் குறைந் திருந்தால் அவ்வுதயாற்பர இராசியே உதய லக்கினமாகும். உதயாற்பரத்தில் உதயாதி சென்ற நாடிவிநாடிகளைக் கழித்துக் கண்ட தொகை உதயலக்கினத்தில் செல்லா நின்ற நாடிவிநாடிகளாம். இவற்றை அவ் இலக்கினப் பிரமாணத்தில் கழிக்க உதய லக்கினத்தில் சென்ற நாடிவிநாடிகளாம்.

(2) உதயாதி சென்ற நாழிகையில் உதயாற்பரம் கழிபட்டால் கழித்தது எஞ்சிய தொகையில் உதயாற்பர இராசிக்கு அடுத்த இராசி முதலாக எத்தனை இராசிகளின் பிர மாணம் கழிபடுமோ அத்தனையும் கழித்து எஞ்சியது அடுத்த (கழிபடாத) இராசியிற் சென்ற விநாடிகளாம் அவ்விராசியே உதயலக்கினமாம்.

(3) மாத முதற்தேதிகளில் இவ்வடையாளமுடன் குறிக்கப்படும் உதயாற்பர விநாடி வரை முதல் மாதஇராசிக்குரிய உதயாற்பரமாம். அதன்மேல் குறித்த மாத இராசியையும் அடுத்த இராசிகளையும் முறையே மேற்சொன்னவாறு கழித்து உதயலக்கினம் கண்டுகொள்க.

பகல்மான நாடி விநாடிகளாவன:

அவ்வத் தேதிகளில் சூரிய உதய முதல் அஸ்தமனம் வரையும் உள்ள பிரமாணமாம்.

சிராத்த திதிகளாவன:

அவ்வத் தேதிகளில் சிராத்தாதி கருமங்கள் கொள்ளப்படுவதற்குரிய திதிகளாம். ழூ இக்குறி (சூனியதிதி) இட்ட தேதிகளில் சௌரமாணிகளுக்கும், ... இக்குறி (அதிதி) இட்ட தேதிகளில் சௌர சாந்திர மாணிகளுக்கும் சிராத்த கருமங்களுக்குரிய திதி இல்லை. ஒரு தேதியில் இரண்டு திதி (திதித்துவயம்) குறிக்கப்பட்டிருப்பின் அன்றே குறித்த இரு திதிகளின் சிராத்த கருமங்கள் கொள்ளப்படுதல் வேண்டும்.

சுபாசுபயோகங்களாவன:

அவ்வத் தேதிகளின் வார திதி ந~த்திரங்களின் சம்பந்தங்களினால் ஏற்படும் யோகங்களாம். அவை அமிர்தம், சித்தம், மரணம் என மூன்று வகைப்படும். அமிர்தசித்த யோகங்கள்: சுபகருமங்களுக்கு விசேடமாகும். இவற்றிற்கு நாழிகை குறித்திருந்தாற் குறித்த நாழிகையின் மேல் மரணயோகம். மரணயோகம்: சுப கருமங்களுக்குத் தீது. இதற்கு நாழிகை குறித்திருந்தால் அதன் மேல் சுபயோகம்.

கரிநாளாவது:

அந்தந்த மாதத்திற் சுபகருமங்களுக்கு விலக்கப்பட்ட தேதியாம்.

அவமாவாவது:

ஒரு நாளில் மூன்று திதி கலந்திருப்பது. இது சுபகருமங்களுக்கு விலக்கப்படும்.

இராமா திவாமாவாவன

மாதத் தியாச்சியமாம். இராமா என்றிருக்கும் தேதிகளின் இரவும், திவாமா என்றிருக்கும் தேதிகளின் பகலும் சுபகருமங்களுக்கு விலக்கப்படும்.

கிராந்தமாவது:

குறித்த பாபக் கிரகங்கள் நிற்கின்ற நட்த்திரமாம்.

வேதையாவது:

குறித்த கிரகங்கள் நிற்கிற நட்த்திரங்களுக்கு வேதைச் சக்கரத்தில் எதிராய்க் குறித்த நட்த்திரங்களாம். இவற்றின் அந்தங்களே குறிக்கப்படுவன. இவை சுபகருமங்களுக்கு ஆகா.

நன்றி ஆதாரம்:

இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம். சோதிட பரிபாலன மடம், யாழ்ப்பாணம், இலங்கை.